எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி செய்கிறீர்கள்? – மத்திய அரசுக்கு எதிராக குமுறும் டெல்லி!
தாங்கள் கேட்ட முழு அளவு ஆக்சிஜனை மத்திய அரசு தரவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லியின் ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டியுள்ளது.
'மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா போன்ற பல மாநிலங்களுக்கு, அவர்களின் கேட்ட முழு அளவு மருத்துவ ஆக்சிஜனை விநியோகித்த மத்திய அரசு, டெல்லிக்கு மட்டும், நாங்கள் கேட்டதை விடவும் குறைவான அளவு ஆக்சிஜன் கொடுத்திருப்பது ஏன்?' என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி அரசு இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டில் உத்தரபிரதேசத்துக்கு அடுத்தபடியாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது டெல்லி. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்களாக காட்சியளிக்கிறது. டெல்லியின் ஆட்சி நடத்தி வரும் ஆம்ஆத்மி அரசுக்கு மத்திய பாஜக அரசு எந்த உதவியும் செய்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை டெல்லியில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 300க்கும் மேற்பட்ட மரணங்கள், டெல்லி அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இது இன்னும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது. உச்சகட்டமாக, இன்றைய தினம் சடலங்களை எரிக்க உதவிய விறகுகளுக்கும் டெல்லியில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகின. தங்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜனை மத்திய அரசு தர மறுக்கிறது என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது டெல்லி.
இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு சார்பில் `மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா உட்பட பல மாநிலங்களுக்கு, அவர்கள் கேட்ட அளவுக்கான மருத்துவ ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது. டெல்லிக்கு மட்டும், நாங்கள் கேட்கும் அளவு கிடைக்காமல் இருக்கிறது. ' என இன்றைய தினம் புகார் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாருக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு உண்மையெனில், ஏன் என்ற விளக்கத்தை தருமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எதுவாகினும், மத்திய அரசு விரைந்து மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ரெம்டெசிவர்' மருந்துக்கான விநியோகம் அதிகரிக்கும்போது, அப்போதும் எங்களுக்கு தேவையான அளவு முழுமையாக தரப்படுமா இல்லையா எனத் தெரியவில்லை. என்றும் டெல்லி அரசு குமுறியுள்ளது.