வாகன நிறுத்துமிடத்தில் தற்காலிக தகனமேடைகள் – தலைநகர் டெல்லியில் தொடரும் அவலம்

டெல்லியில் மயானங்கள் நிரம்பி வழிவதால் பூங்காக்கள், வாகனம் நிறுத்துமிடங்களில் தற்காலிக தகனமேடைகள் அமைக்கப்படுகின்றன.

டெல்லியில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று மேலும் 24,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,22,286 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் மாநிலத்தில் 395 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,772 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 97,977 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசின் புள்ளி விவரங்களைவிட உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரம் அதிகமாக இருக்கிறது என தனியார் ஆங்கில தொலைக்காட்சியின் புலனாய்வில் தெரிவித்துள்ளது.

2 கோடி பேர் வசிக்கும் டெல்லியில் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன, நோயாளிகளை படுக்க வைக்க படுகைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தீர்ந்து போனதால் நகரில் உள்ள இரு மருத்துவமனைகளில் நோயாளிகள் இறந்துள்ளனர். போதிய எண்ணிக்கையில் ஆம்புலன்களும் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களைக் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உறவினர்கள் தவித்து வருகிறார்கள். ஆம்புலன்ஸுக்கு காத்திருந்தே பலர் உயிரிழந்திருக்கின்றனர்.

டெல்லியில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை எரிக்க இடமில்லாததால், டோக்கன் வாங்கி உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

மயானங்களில் இரவு, பகலாக இடைவேளை இன்றி சடலங்கள் எரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் மயானங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வாகன நிறுத்துமிடங்கள், பூங்காங்கள், காலி மைதானங்கள் போன்றவற்றில் தகனமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

டெல்லியின் சராய் காலே கான் மயானத்தில் 27 புதிய தகன மேடைகள் கட்டப்பட்டுள்ளன. அருகில் உள்ள பூங்காவில் மேலும் 80 தகன மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

யமுனை நதிக்கரையில் கூடுதலாக தகன மேடைகளை அமைக்க முடியுமா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

More News >>