18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி நாளை போட முடியாது.. மாநகராட்சி ஆணையர் தகவல்..
தேவையான தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவிவருகிறது, நாள்தோறும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
இதையடுத்து, மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. எனினும், தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி போடும் பணியை தொடங்க முடியாது என்று தெரிவித்து இருந்தன.
இந்த நிலையில், சென்னையில் 18- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை நாளை செயல்படுத்த இயலாது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தேவையான தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.