“தமிழகத்தில் அதிமுக வாஷ்அவுட்” – “எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறப்போகும் காங்கிரஸ்”
தமிழகத்தில் அதிமுக 18 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெறும் என பிரபல வார இதழ் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதனிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிரபல வார இதழ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் அதிமுக வெறும் 18 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திமுக 200 தொகுதி வரைக்கும் வெறப்போவது நிச்சயம் என்ற கருத்துக்கணிப்பு சரியான கருத்து கணிப்பு என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற ஊடகங்கள் பலவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டதில் திமுகதான் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று சொல்லியிருக்கின்றன என்றும், இத்தனை ஊடகங்கள் கணித்திருக்கும் கருத்துக்கணிப்பை தவறு என்று சொல்வதற்கு அதிமுகவினர் என்ன பெரிய ராஜதந்திரிகளா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்றும், ஸ்டாலின் முதல்வராக வர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், நிச்சயம் திமுக 200 தொகுதிகளில் வெல்லும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி அந்தஸ்தை அதிமுக இழக்கப் போவது நிச்சயம் என்றும், 20 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி பெற்றுவிட்டால் அக்கட்சிதான் தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறப் போகிறது என அவர் தெரிவித்துள்ளார்.