சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
இந்தியாவில் கொரேனா அலை முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை உக்கிரமடைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 4,01,993 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே போல 3523 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதே காலகட்டத்தில் 2,99,988 பேர் சிகிச்சை முடிந்து பூரண குணநலன் பெற்று வீடு திரும்பியிருக்கின்றன. இதனையடுத்து இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.91 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து 1,56,84,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர். இந்தியாவில் மொத்தமாக கொரோனா பலி எண்ணிக்கை 2,11,853 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 32,68,710 ஆக உயர்ந்துள்ளது.
இந்த எண்ணிக்கை இந்தியாவை மட்டுமல்லாது உலக நாடுகளையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு நேரடி விமானச் சேவையைத் துண்டித்தது. இதனால் 9 ஆயிரம் இந்தியவாழ் ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையில், அண்மையில் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜப்மா, கனே ரிச்சர்ட்சன் ஆகியோர் இந்தியாவிலிருந்து நேரடியாக இல்லாமல் வேறு நாட்டின் வழியாக ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பியுள்ளனர்.
இதேப்போல் பலரும் வேறு நாட்டின் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கள் சொந்த குடிமக்களே ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் அல்லது 66 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.