ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு.. மே 7ஆம் தேதி பதவியேற்பு...
பதவியேற்பு எளிமையாக நடைபெறும் என்றும், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது.
தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனைத்தொடர்ந்து மறைந்த தி.மு.க.தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் கொளத்தூர் தொகுதியின் வெற்றி சான்றிதழை சமர்ப்பித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் வழங்கி உள்ளனர். இந்த மகத்தான வெற்றிக்கு வழிவகுத்து தந்திருக்கும் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் இதயப்பூர்வமான நன்றி. இந்த நிலையில், வரும் 7 ஆம் தேதி தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.