ஸ்டாலின் வெற்றிக்காக பெண் தொண்டர் செய்த காரியம்...! பரமக்குடியில் பரபரப்பு...!

சட்டப்பேரவை தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதலமைச்சராக உள்ளதை அடுத்து, பெண் தொண்டர் ஒருவர் தனது நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வனிதா. தி.மு.க.வின் தீவிர தொண்டரான இவர், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானால் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்துவதாக பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் வேண்டிக் கொண்டுள்ளார்.

இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதுடன், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க இருப்பதால், வனிதா தனது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக முத்தாலம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு கோயில் வாசல்படியில் வனிதா நாக்கை கூர்மையான கத்தியால் அறுத்து வைத்துள்ளார். ரத்தப் போக்கு காரணமாக சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே வனிதா மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து வனிதா அருகில் வந்துள்ளனர். அப்போது அவர் தனது நாக்கை அறுத்து கோவில் படிக்கட்டில் வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பரமக்குடி நகர் போலீசார் , வனிதாவை சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் துண்டாகி கிடந்த நாக்கையும் போலீசார் அப்புறப்படுத்தினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துமனையின் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பெண் தொண்டர் ஒருவர் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>