ஒரு வாரத்திற்கு தேவையான தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு – 45 லட்சம் தமிழர்களின் கதி…

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,18,959 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 20,935 பேருக்கு கொரோனா செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் மாநிலத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பரவல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க கடந்த ஜனவரி16ம்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதலில் முன்கள பணியாளர்களான சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், உள்ளாட்சித்துறையினருக்கும் மட்டும் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 60 வயது மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரையுள்ள இணை நோய் பாதிப்புள்ளவர்கள் என படிப்படியாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 1ம் தேதியிலிருந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்த மத்திய அரசு தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களே கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று கூறியது. இதனடிப்படையில் ஒன்றரை கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு அனுப்பியுள்ள 72 லட்சத்து 85ஆயிரம் தடுப்பூசிகளில் 60 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீணாகியுள்ள தடுப்பூசிகள் போக ஒரு வாரத்திற்கு தேவையான 6 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளது. இதனால் முதல் தடுப்பூசி செலுத்தியுள்ள 45 லட்சம் பேருக்கு 2வது தடுப்பூசி போட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ள கூடுதலான தடுப்பூசிகள் வந்த பிறகு 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

More News >>