அதிமுகவில் அதகளம் – எதிர்கட்சி தலைவருக்காக நடக்கும் கடும் போட்டி!

அதிமுகவில் எதிர்கட்சித்தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு எதிர்பார்த்தபடி அமையவில்லை. மீண்டும் ஆட்சி அமைத்துவிடலாம் என நம்பிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அது கைகூடவில்லை. மே2ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின்படி, அ.தி.மு.க. 65 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. அதன் கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சரி.. முதல்வர் பதவிதான் நம் கையை மீறி சென்றுவிட்டது.

எதிர்கட்சித்தலைவர் பதவியையாவது பெற்றுவிடலாம் என்று எண்ணுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர்களும் இந்த பதவிக்கு அடிபோடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும் தனக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஏற்கனவே, கடந்த தமிழக சட்டசபையில் 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க. இருந்திருக்கிறது. தற்போது, 4-வது முறையாக அந்த இடத்திற்கு செல்கிறது.

இந்நிலையில், எதிர்கட்சித்தலைவரை நியமிப்பது தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 7-ந் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்க இருக்கிறார்கள்.இதுதொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ``நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 7-5-2021 மாலை 4.30 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்'' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் (எதிர்க்கட்சி தலைவர்) தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது. மேலும், கட்சியின் கொறடா தேர்ந்தெடுக்கப்படுவதுடன், 16-வது சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட இருக்கிறது. அநேகமாக ஆட்சியை எடப்பாடியும், கட்சியை ஓபிஎஸூம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான் ஒப்பந்தம். அதனடிப்படையில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் 7ம் தேதி கட்சியிலிருந்து பல அதிருப்தி குரல்கள் எழும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

More News >>