அமைச்சர் பதவிக்கு உங்களுக்கு கிடைக்குமா? –என்ன சொல்கிறார் உதயநிதி?

தனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது குறித்த கேள்விக்கு உதயநிதிஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. வருகின்ற 7ம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிகேணி தொகுதியில் போட்டியிட்டார். அதில், அவர் மொத்தம் 91,776 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 68,133 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில், கொரோனா நலத்திட்ட உதவிகளை அந்த பகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது பேசிய உதயநிதி, எனக்கு கிடைத்து இருக்கக்கூடிய வெற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்றும் தன்னுடைய தாத்தா கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி எனவும் நெகிழ்ச்சியாக பேசினார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளி வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இன்னும் 4 நாட்களில் தெரிந்து விடும்” என்று உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.

பொள்ளாச்சி விவகாரம் குறித்து திமுக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்ற கேள்விக்கு, “பதவி ஏற்ற பிறகு நடவடிக்கைகள் இருக்கும்” என்றும் உதயநிதி கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தனது முதல் தேர்தலிலேயே அதிகப்படியான வாக்குகள் பெற்று அசத்தி இருக்கிறார்.

More News >>