இனி இவர்களும் முன்கள பணியாளர்கள் தான் – ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!
கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத்துறையினர் முன்களப்பணியாளர்களாக தமிழகத்தில் கருதப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அந்த அறிவிப்பின்படி, மக்களுக்காக முன்களத்தில் நின்று பணியாற்றும் பத்திரிகையாளர்களும் முன்கள பணியாளர்கள் தான் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. தமிழகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மத்தியிலும் இந்த கோரிக்கை எழுந்தது. தமிழகத்தில் உள்ள ஊடகவியாலளர்களை முன்கள பணியாளர்கள் என்று அறிவிக்க வேண்டும் என ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், பத்திரிகையாளர்களின் கோரிக்கைக்கு செவிசாய்துள்ள ஸ்டாலின் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத்துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப்பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள். செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
வருகின்ற 7ம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.