செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 11 பேர் பலி… ஆக்சிஜன் தட்டுப்பாடுதான் காரணமா…?
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 11 பேர் உயிரிழந்துள்ளநிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகதான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை கடும் வீரியத்துடன் பறவி வருகிறது. இதற்கு எதிராக தடுப்பூசி போடப்படுகிறது. இருப்பினும் கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்த முடியவில்லை. நாடு முழுவதும் பல மாநிலங்களில் நாள்தோறும் மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனாவால்பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனிடையே மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன், ரெமிடிசிவிர் மருந்து உள்ளிட்ட தட்டுப்பாடு நிலவுகிறது. இதனாலும் உயிர்பலி நிகழ்ந்து வருகின்றது.
இதனிடையே தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தினமும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நள்ளிரவு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே அவர்கள் உயிரிழந்துள்ளதாக இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்..
நேற்று இரவு 10 மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். உடனடியாக, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. அதற்குள் மேலும் அடுத்தடுத்து சிலர் இறந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 உயிரிழந்ததற்கான காரணம் குறித்து இதுவரை மருத்துவமனை தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.