எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு.. இன்று கவர்னரை சந்திக்கிறார்..
சென்னையில் நேற்று மாலை நடந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் கவர்னர் மாளிகை சென்று இன்று கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 158 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.
தி.மு.க. மட்டுமே தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்றது. இதையடுத்து தி.மு.க. ஆட்சி அமைக்கிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக வரும் 7-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 4-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாலை சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது.
இக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கூட்டத்தில் கரவொலி எழுந்தது. இதையடுத்து மு.க. ஸ்டாலின் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார். மேலும் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறும் மு.க. ஸ்டாலின் உரிமை கோருவார். முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலினுக்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.