தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே அமராவதி சாலை கிராமத்தில் வசித்து வருபவர் செல்லையா. இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் ராஜசேகரன், இரண்டாவது சிவகுமார், இளைய மகன் ரவிகுமார். லாரி ஓட்டுநரான இளையமகன் ரவிகுமார், நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
மற்ற இரண்டு மகன்களும், தந்தையின் ஊரிலேயே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தந்தை செல்லையாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ரவிகுமார் அவரை பார்ப்பதற்கு தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார்.இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான ஆடு இறந்துள்ளது, இறந்த ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்காக இரண்டாவது மகன் சிவகுமார் விலைக்கு வாங்கி வந்துள்ளார். இதனைப் பார்த்த ரவிக்குமார் இறந்த ஆட்டை சாப்பிட வேண்டாம் என கூறி அண்ணனை கண்டித்துள்ளார்.
இதனால் தம்பி ரவிகுமாருக்கும், அண்ணன் சிவகுமாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில்
தம்பி ரவிகுமாரை, அண்ணன்கள் சிவகுமாரும், ராஜசேகரனும் சேர்ந்து தாக்கியுள்ளனர். மேலும் ஆத்திரமடங்காத சிவகுமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து தம்பி ரவிக்குமாரை சராமரியாக குத்தியுள்ளார். இதில்
படுகாயமடைந்த ரவிக்குமாரை அருகில் இருந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் ரவிக்குமார் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்து, ரவிக்குமாரை குத்திக் கொன்ற அண்ணன் சிவகுமாரையும் தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு அண்ணன் ராஜசேகரனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.