ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
ஆன்லைன் விளையாட்டிற்காக கடந்த ஒரு வருடத்தில், தனது தந்தையின் லாக்கரில் இருந்த 12 லட்சம் ரூபாயை திருடி செலவு செய்த 8ம் வகுப்பு மாணவன் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளான்.
சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான ராம் விலாஸ். தனது லாக்கரில் இருந்து 12 லட்சம் ரூபாய் பணம் சிறுக, சிறுக காணாமல் போவதாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வீசாரணை மேற்கொண்டதில், புகார் கொடுத்தவரின் 13- வயது மகனே ஆன்லைன் விளையாட்டிற்காக, லாக்கரில் இருந்து, பணத்தை திருடியது தெரியவந்தது.
மேலும் தனது 3 நன்பர்களுடன் சேர்ந்து ஆன்லைன் விளையாட்டை விளையாடும்போதும், சிறுவனுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் தந்தையின் லாக்கரில் இருந்த பணத்தை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12 லட்சம் ரூபாய் எடுத்துள்ளார். அந்த பணத்தை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் சுகுமார் உதவியுடன் ஆன்லைன் விளையாட்டிற்கு ரீசார்ஜ் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதன்அடிப்படையில் சிறுவன், அவரது 3 நண்பர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் சுகுமார் ஆகியோரிடம் நொளம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். ஆன்லைன் படிப்பிற்காக கொடுக்கப்பட்ட செல்போனை விளையாட்டிற்கு பயன்படுத்தியதும், அதற்காக பணத்தை திருடியதாக சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.