எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
அதிமுகவின் எதிர்கட்சித்தலைவர் யார் என்ற விவாதம் கட்சிக்குள் பூதாகரமாக எழுந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவின்படி, அதிமுக கூட்டணி 75 இடங்களை பெற்று எதிர்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. இது ஏறக்குறைய கடந்த 2006ம் ஆண்டு நிகழ்வை ஒத்ததுதான். ஏனென்றால், 2006ம் ஆண்டில் ஜெயலலிதா இருந்த போது இருந்த அதிமுக போன்ற ஒரு நிலை தற்போது உருவாகியுள்ளது. கடந்த முறை ஜெயலலிதா எதிர்கட்சித்தலைவராக ஓ.பன்னீர் செல்வத்தை நியமித்தார்.
பிறகு சிறிது நாட்களுக்கு பிறகு ஜெயலலிதாவே எதிர்கட்சித்தலைவர் ஆனார். ஆனால், இப்போது தான் சிக்கல் எழுந்துள்ளது. அதிமுகவில் இருக்கும் இரட்டை தலைமையான ஓபிஎஸ் – இபிஎஸ் எதிர்கட்சித்தலைவர் பதவியை இருவருமே விரும்புவதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் வேட்பாளர் பதவியை விட்டுக்கொடுத்த தனக்கு எதிர்கட்சித்தலைவர் பதவியை கொடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கருதுகிறார். தனது விருப்பத்தை அவர் ஏற்கனவே கட்சியின் சீனியர்களிடம் தெரிவித்துவிட்டார். இது குறித்து விவாதிக்க கே.பி.முனுசாமி தருமபுரியில் இருந்சூ நேரடியாக தேனியில் ஓபிஎஸ் வீட்டிற்கே சென்றுவிட்டார்.
அங்கு சுமார் நான்கு மணி நேரத்திற்குமேல் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. அப்போது எதிர்கட்சித்தலைவராக இபிஎஸ் தன்னை அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் விரும்புவதாகவும் ஆனால் அதனை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்கிற முடிவு எடுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதே போல் அதிமுக இப்போது உள்ளது போல் தனது முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றால் எதிர்கட்சித் தலைவர் பதவி அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
மேலும் அடுத்தடுத்த தேர்தல்களில் முக்கிய பங்கு வகிக்கவும் கட்சியில் மட்டும் அல்ல அரசியல் களத்திலும் சுறுசுறுப்பாக இயங்க எதிர்கட்சித்தலைவர் பதவி உதவும் என்பது அவரது கணக்கு. இதற்காக தனது ஆதரவாளர்களை ஏற்கனவே எடப்பாடியார் ஒன்று திரட்ட ஆரம்பித்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பிருந்த ஒத்துழைப்பு தற்போது எடப்பாடியாருக்கு பிறரிடம் இருந்து இல்லை என்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பு வரை எடப்பாடியாருக்கு வலது புறமாகவும் இடதுபுறமாகவும் இருந்த இரண்டு அமைச்சர்கள் கூட இந்த விஷயத்தில் வெளிப்படையாக எடப்பாடியாரை ஆதரிக்க தயாராக இல்லை என்கிறார்கள். இதே போல் சீனியர் அமைச்சராக இருந்த செங்கோட்டையனும் எதிர்கட்சித்தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதாக கூறுகிறார்கள். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது. அங்கு வைத்து இதைப்பற்றி பேசிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும் மே7ம் தேதி இதற்கான முடிவு தெரியவரும்.