ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கும் என மத்திய அரசு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளும் நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததை அடுத்து ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி எப்போது துவங்கப்படும் எனவும், ஜெர்மனி, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரப்பெற்றுள்ள உதவிகளை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான நடைமுறை குறித்தும் மத்திய அரசிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், அரசிடம் விளக்கம் பெற்று நாளை தெரிவிப்பதாக கூறினார்.

பின்னர் தமிழகத்திற்கு ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 500 ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மாநிலங்களின் பாதிப்பின் அடிப்படையில் எவ்வித பாகுபாடிமின்றி பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும், அதிகாரிகள் இருப்பதனால் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கிறது என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என கூறிய தலைமை நீதிபதி, இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளரிடம் விபரங்களை பெற்றோ அல்லது அவரே ஆஜராகியோ தெரிவிக்கும்படி தமிழக அரசு வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளது.

பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தொலைக்காட்சி பத்திரிக்கைகளில் திமுக-வினரின் கொண்டாட்டங்கள் குறித்த செய்திகள் வெளியானதை தலைமை நீதிபதி சுட்டிக்காட்டியபோது, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, உடனடியாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு இந்த கொண்டாட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டதாகவும், கொண்டாட்டங்கள் கூடாது என்று கட்சித் தலைவரே அறிக்கை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பதவியேற்பு விழா எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளதை வரவேற்ற தலைமை நீதிபதி, தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களை சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி திமுக தலைமையை கேட்டுக்கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

More News >>