கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
கொடிய தொற்றுநோயான கொரோனாவை தடுப்பதற்கான ஊசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்பதால் அதற்காக பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு CoWin என்ற இணையதளத்தில் அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் 18 வயதுக்கு மேற்பட்டோரும் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டதும் மே 1ம் தேதி முதல் முன்பதிவு செயல்பாட்டின் வேகம் குறைவாக உள்ளது. ஆகவே, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பதிவு செய்வதற்கு மக்கள் வேறு வழிகளை தேட ஆரம்பித்தனர்.
குறிப்பாக, ஆண்ட்ராய்டு சாதனங்களை பயன்படுத்துவோரை குறி வைத்து ஒரு புதிய மால்வேர் (தீங்கு செய்யும் ஃபைல்)உலா வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள உதவுவதாக போலி குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்)வருகிறது. அதை கிளிக் செய்வோரை சரியான இடத்திற்குக் கொண்டு சேர்ப்பதற்குப் பதிலாக மொபைல் போனில் தீங்கு செய்யும் ஃபைலை நிறுவிவிடுகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு இலவச பதிவு இருப்பதால் இந்திய பயனர்களை குறி வைத்து இந்த போலி குறுஞ்செய்தி உருவாக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
இந்தப் போலி செய்தியில் உள்ள இணைப்பை கிளிக் செய்தால் அது தொடர்பு பட்டியலில் உள்ள விவரங்களை உளவு பார்ப்பதோடு, மொபைல் போனில் மால்வேரையும் இன்ஸ்டால் செய்து விடுகிறது. முன்பு Covid-19 என்று பெயரிடப்பட்டிருந்த இந்த செயலி தற்போது தடுப்பூசி பதிவேடு (Vaccine Register)என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கு CoWin portal அல்லது Aarogya Setu மற்றும் Umang செயலிகள் மூலம் பதிவு செய்வது பாதுகாப்பானது. My Gov Corona மூலம் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி அருகிலுள்ள தடுப்பூசி மையங்களை அறிந்துகொள்ளலாம். வேறு சில மூன்றாம் நபர் இணையதளங்களும் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய உதவுகின்றன. ஆனால் நாம் அவற்றை கவனமாக தெரிவு செய்ய வேண்டும்.