சிக்குவாரா விஜயபாஸ்கர்? - குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கிறது
தடை செய்யப்பட்ட புகைப்பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் வாங்கியது தொடர்பான, குட்கா ஊழல் புகார் வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடைசெய்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலலிதா சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் குட்கா விற்பனையாளர் மாதவ ராவ் உள்ளிட்ட பல குட்கா தயாரிப்பு ஆலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தியது.
இதற்குப் பிறகு வருமான வரித்துறை, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சிலரது ஒத்துழைப்புடன்தான் இந்தப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன; இதற்காக அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.
இந்தக் கடிதம் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஊடகங்களில் கசிந்தது. ஆனால், அந்த மாதிரியான கடிதம் ஏதும் எழுதப்படவில்லை என தமிழக அரசு மறுப்புத் தெரிவித்தது. அதே தருணத்தில் தமிழகத்தின் புதிய காவல்துறை தலைவராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார்.
ஆனால், இந்த விவகாரத்தைத் தீவிரமாக விசாரிக்க முற்பட்டதாலேயே காவல்துறையின் முன்னாள் தலைவர் அசோக்குமார் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார் என்றும் மாநகர காவல்துறையின் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் அருணாச்சலம் முக்கியத்துவம் இல்லாத அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மாற்றப்பட்டார் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த விவகாரத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகரத்தின் முன்னாள் ஆணையர் ஜார்ஜ், தற்போதைய காவல்துறை தலைவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டிய திமுக, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து. தி.மு.கவின் சார்பில், வழக்கைத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இந்திரா பானர்ஜி தலைமையிலான முதலாவது அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில், வருமான வரித் துறை ஒரு பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தது.
அந்தப் பிரமாணப் பத்திரத்தில், 2017ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதியன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, சசிகலாவின் அறையில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அங்கு முன்னாள் டிஜிபி அசோக் குமார், 2016 செப்டம்பர் 2ஆம் தேதி முதல்வருக்கு எழுதிய கடிதம் கிடைத்ததாகவும் அத்துடன் வருமான வரித்துறையின் முதன்மை இயக்குனர் 2016 ஆகஸ்ட் மாதம் எழுதிய ரகசியக் கடிதமும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும் வருமான வரித்துறை கூறியிருந்தது.
குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறை எழுதிய கடிதமே இல்லை என தமிழக அரசு கூறியிருந்த நிலையில், வருமான வரித்துறை தாக்கல் செய்த இந்த பிரமாணப் பத்திரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசு தொடக்கம் முதலே கூறிவந்தது. அதேபோல் வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் குட்கா சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் மாதவ ராவ் அமைச்சர் ஒருவருக்கு 56 லட்ச ரூபாய் லஞ்சமாகக் கொடுத்ததை விசாரணையில் ஒப்புக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமெனக் கூறி தீர்ப்பளித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com