சின்னம்மா குடும்பத்தை சிதைக்கிறீர்கள் - ஜெய் ஆனந்த்
எங்களை திரைமறைவில் அசிங்கபடுத்தினால் நாங்கள் தவறான வழி எடுப்போம் என கனவு கண்டு சின்னம்மா குடும்பத்தை சிதைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் கூறியுள்ளார்.
சசிகலா கும்பத்திற்குள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிட்டது முதல்பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. தினகரன் தரப்பும், திவாகரன் தரப்பும் மாற்றி மாற்றி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தனது முகநூல் பக்கத்தில், “மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது முகநூல் பக்கத்தில், “எங்கள் தியாகத்தை கொச்சைபடுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தை சார்ந்த திரு. திவாகரனும், ஜெய் ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது.
தங்களின் சுயலாபத்திற்காக கழகத்தையும், எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதிர்கள்… நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களை குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்” என்று தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து திவாகரன், “கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தினகரன் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். நானும் எனது மகனும் ஈபிஎஸ் அணியில் இணைய உள்ளதாக தவறான தகவலை பரப்புகின்றனர். திராவிடமும் அண்ணா பெயரும் இல்லாத கட்சி பெயரை நாங்கள் ஏற்க முடியாது” என்று தெரிவித்து இருந்தார்
இந்நிலையில், இது குறித்து கும்பகோணம் அருகே சுவாமிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியில் அண்ணா இல்லை என்று காழ்ப்புணர்ச்சியால் திவாகரன் பேசுகிறார். உறவு என்பது வேறு, கட்சி என்பது வேறு என்றும் கட்சியை தனிநபராக ஆட்டிப்படைக்க திவாகரன் நினைக்கிறார்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், டிடிவி தரப்புக்கு எதிராக இன்று வியாழன் (ஏப்ரல் 25) திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் அடுத்தடுத்து முகநூலில் பதிவுகளை வெளியிட்டார். முதல் பதிவில், ‘சின்னம்மா, திவாகரனுக்கு பிறந்த நாள் முதல் சகோதரர்… ஒன்றாக வளர்ந்தவர்கள்… அக்காவை திட்டாத தம்பி உலகில் கிடையாது… இதை கூடப் பெரிதாக்க வெற்றிவேல் கரவம்கட்டுவது ஏனோ?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அடுத்த பதிவில், ‘அ.தி.மு.க வரலாற்றில் M.N என்று ஒரு chapter உண்டு. அதுபோல குடும்பத்தில் ஒரு சிலருக்கு உண்டு. நான் கேட்கும் கேள்வி:- கழகத் தொண்டனாய் செயல்பட்ட ஒரு சிலருக்கு சின்னம்மா குடும்பம் என்ற பட்டத்தை தலையில் கட்டி, குடும்ப அரசியல் என டாடா காட்ட வெற்றிவேல் துடிக்க காரணம் என்ன? எங்களை திரைமறைவில் அசிங்கபடுத்தினால் நாங்கள் தவறான வழி எடுப்போம் என கனவு கண்டு சின்னம்மா குடும்பத்தை சிதைத்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களை சொல்லி ஒன்னும் ஆகாது. தூண்டுபவர்களை சொல்ல வேண்டும்.’ என குறிப்பிட்டிருக்கிறார்.
ஜெய் ஆனந்த் இன்னொரு பதிவில், ‘எனது தந்தைக்கு பதவி ஆசை இருந்திருந்தால் TTV யுடன் ஒரு வருடத்திற்கு முன்பு சேர்ந்தே இருக்க மாட்டார். வந்தவரை அரவணைக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை. திட்டமிட்டு புறக்கணித்தால் அவர் எப்படி பொருத்திருப்பார். அவர் என்ன சிறுவனா?’ என கேட்டிருக்கிறார்.
மற்றொரு பதிவில், ‘சின்னம்மா மீது உள்ள களங்கத்தை TTV தான் துடைத்தார் என கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. சின்னம்மா மத்திய அரசாங்கத்திற்கு பணியாமல் சிறை சென்ற அனுதாபம், சின்னம்மாவின் பக்கபலம் மற்றும் அம்மா அவர்கள் சின்னம்மாவை எடுக்க சொன்ன வீடியோ- இவை மூன்றும் தான் TTV -யை கரைசேர்த்தன. ஆர்.கே நகரில் வென்ற துணிச்சலில் வெற்றிவேல் பேசுவது எதிர்காலத்தில் பாதகமாகிவிடும்.’ என கூறியிருக்கிறார் ஜெய் ஆனந்த்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com