ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியக பணிகள் ஏப்ரல் மாதத்துக்குள் முடிந்துவிடும் - அமைச்சர் எ.வா. வேலு தகவல்
பொருநை ஆற்றங்கரையில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தி தமிழர் நாகரீகத்திற்கு பெருமை சேர்க்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் நெல்லை ரெட்டியார்பட்டியில் 56 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகத்தின் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா. வேலு பொதுப்பணித்துறை செயலாளர் ஜெயகாந்தன் , நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ் மற்றும் நெல்லை மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் இன்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வா. வேலு,'' நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் பொருநை அருங்காட்சியகத்தில் கொற்கை , ஆதிச்சநல்லூர் , சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கப்பெற்ற பொருட்களை வைப்பதற்கு தனி தனியாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதோடு, நிர்வாக கட்டிடங்கள் , சுகாதார வளாகம் என ஏழு பிரிவுகளாக அருங்காட்சியகம் அமைகிறது. தற்போது 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.கலைவடிவம் செய்வது,மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.மே 15 ம் தேதி வரை பணிகள் முடிக்க காலஅவகாசம் உள்ளது. ஆனால், ஏப்ரல் மாதத்திற்குள் அருங்காட்சியக பணிகளை முடிந்து விடும்.
மாநில நிதியில் இருந்து நேரடியாக அமைக்கும் சாலைகளில் சுங்கசாவடி அமைக்கப்படுவதில்லை.தேவைக்கேற்ப அவசரமாக போடும் சாலைகளுக்கு நிதியை உலகவங்கியில் கடனாக பெறும் போது சுங்க சாவடிகளை அமைப்பதில் தவறு இல்லை.மத்திய அரசு மாநில அரசிடம் 7 மீட்டர் அகல சாலையை 10 மீட்டர் அகல சாலையாக மாற்றுவதாக பெறுகிறது. பின்னர், அதில், சுங்க சாவடிகள் மத்திய அரசு மூலம் அமைக்கப்படுகிறது. காலவதியான சுங்க சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
தேசிய நெடுஞ்சலையில் பெரு வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை செப்பனிட மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி வரவில்லை. இதனால், பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாஸ்ட் டேக் புதிய விதிமுறைகள் மக்கள் மீது செலுத்தப்படும் சுமை ஆகும். இது தவறான செயல்.பாஸ்டேக் அமைப்பை முறைப்படுத்த வேண்டுமே தவிர... பணம் இல்லை என்றால் அபராதம் போடுவது சரியில்லை.டெல்லி செல்லும் போது மத்திய அரசிடம் புதிய விதிகளை தளர்த்த வலியுறுத்தப்படும் என்றார்.