அடைக்கப்படாத ரயில்வே கேட் - வேகமாக வந்த ரயிலால் பதறிய வாகன ஓட்டிகள்..!
திருநெல்வேலியில் ரயில் பைலட்டின் எச்சரிக்கையால் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நேற்று மாலை 6:50 க்கு திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் ஒன்று கிளம்பிச் சென்றது. அப்போது, ரயில்வே நிலையத்திலிருந்து அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றைக் கடந்து திருநெல்வேலி கொக்கிரகுளம் - மேலப்பாளையம் குறிச்சியை நோக்கி ரயில் வேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, அங்கு அமைந்துள்ள ரயில்வே கேட் அடைக்கப்படாமல் வாகனங்கள் தண்டவாளத்தைக் கடந்துகொண்டிருந்தன. ரயில் வேகமாக வருவதைப் பார்த்ததும் பேருந்தில் பயனம் செய்த பயணிகள், ஓட்டுனர்கள் மற்றும் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் அனைவரும் பதறினர்.
அதே நேரம், வேகமாக வந்த ரயிலும் வேகத்தைக் குறைத்து ரயில்வே கேட் அருகே வந்த போது நின்றது. ரயில் பைலட் தண்டவாளத்தைக் கடந்த வாகனங்களைப் பார்த்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
பின்னர் ரயில்வே கேட் காப்பாளர், ரயில்வே கேட்டை அடைத்த பிறகு ரயில் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. கிளம்பிச் செல்லும் ரயிலில் இருந்த ரயில் பைலட் ரயில்வே கேட் கீப்பரை பார்த்து கோபமாக ஏதோ கூறிவிட்டுச் சென்றார்.
இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் ரயில்வே கேட் கீப்பர் மொபைல் போனில் பேசிக்கொண்டு இருந்ததாகவும், ரயில் வருவதை அவர் கவனிக்கவில்லை என்று தெரிவித்தனர்.
ரயில்வே கேட், ரயில் வரும்போது அடைக்கப்படுவதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் இருந்தும், எவ்வாறு ரயில் வருவதை அறியாமல் ரயில்வே கேட்டை மூடாமல் கேட் கீப்பர் இருந்தார்? என்ற மிகப்பெரிய கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக திருநெல்வேலி ரயில் நிலைய உயர் அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் பேசிய போது, இது குறித்த தகவல் எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து இருக்கிறோம். இது குறித்து ரயில்வே கேட் காப்பாளரிடம் விசாரித்தோம். ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயில்வே கேட்டை மாடு ஒன்று கடந்து சென்றதாகவும், அந்த மாடு ரயில்வே கேட்டை உடனடியாக கடக்காமல், ரயில்வே தண்டவாளத்திலேயே நின்றது, அதனை விரட்டும் முயற்சியில் ரயில்வே கேட் கீப்பர் ஈடுபட்டிருக்கிறார், அதனாலேயே உடனடியாக ரயில்வே கேட்டை, ரயில் வருவது தெரிந்தும் அடைக்க முடியவில்லை. பின்னர் மாட்டை ரயில்வே தண்டவாளத்திலிருந்து விரட்டிய பிறகு, ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. அதன் பிறகு, ரயில் கிளம்பி சென்றது” என்று கூறினார்.
மேலும், “ரயில் வரும் நேரம் அறிந்து, அந்த நேரத்தில் ரயில்வே தண்டவாளத்தில் யாரேனும் கடக்கிறார்களா? விலங்குகள் எதுவும் நிற்கிறதா என முன்கூட்டியே பார்த்திருக்க வேண்டியது, ரயில்வே கேட் கீப்பரின் கடமை. இது குறித்து அவர் மேல் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனவும் ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எது எப்படி இருந்தாலும், இந்த சம்பவம் திருநெல்வேலியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரயில் நிலையங்கள் மற்றும் கேட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், ரயில்வே பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதும் ரயில்வேயின் கடமை அல்லவா? அதேபோல ரயில் கடந்து செல்லும் பாதையில் உள்ள ரயில்வே கேட்டின் இருபுறமும் நிற்கும் பயணிகளின் பாதுகாப்பையும் ரயில்வே துறை தானே உறுதி செய்ய வேண்டும்.