மருத்துவமனை வளாகத்தில் எரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள்... பொதுமக்கள் பாதிப்பு...!

திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே மனித கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதாக ஆதித்தமிழர் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதித்தமிழர் கட்சியினர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது...!

திருநெல்வேலி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ஒரு ஓரமான பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டி, அதனை எரிக்கும் செயல்பாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, மருத்துவமனைக்கு அருகிலுள்ள எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், அன்னை இந்திரா நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்த மருத்துவ கழிவுகளை எரிப்பதனால் ஏற்படும் புகை மற்றும் நச்சுத்தொற்றுகள், சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கின்றன. குறிப்பாக, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறல், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களுக்கு ஆளாகும் அபாயம் உருவாகியுள்ளது.

அதேசமயம், மருத்துவ கழிவுகள் மற்றும் மனித கழிவுகளை மருத்துவ விதிமுறைகளின்படி தனியாக அகற்றாமல், பொதுவான முறையில் எரிப்பது சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தாக அமைகிறது. இது, மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் செயலாகும்.

எனவே, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அவர்கள், உடனடியாக இந்த கழிவுகளை எரிக்கும் செயல்பாட்டை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ கழிவுகளை சரியான முறையில் அகற்ற, சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு கவனிக்க வேண்டும்.

இவ்வாறு எமது கோரிக்கையை பரிசீலனை செய்யாமல், இந்த செயல்பாடுகள் தொடர்ந்தால், அந்தப் பகுதி மக்கள் மற்றும் ஆதித்தமிழர் கட்சி சார்பாக, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட வேண்டிய நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலனிடம் கேட்டபோது, "மருத்துவ கழிவுகளோ மனித கழிவுகளோ எரிக்கப்படுவதில்லை. உபயோகப்படுத்திய தேவையில்லாத காகிதங்களை மட்டுமே அங்கு வைத்து எரித்திருக்கிறார்கள் என்றும் இது குறித்து தீவிரமாக விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.

More News >>