28 கோடியை வீணடிக்காதே... திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் மதிமுக கவுன்சிலர் ஏற்படுத்திய பரபரப்பு
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட 55 வார்டுகளுக்கான மாமன்ற கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது. மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டம் அமைதியாக நடைபெற்று வந்த நிலையில் மதிமுக கவுன்சிலர் ராதா சங்கர் எதிர்பாராத விதமாக பதாகையை ஏந்தி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது."வீணடிக்காதே, வீணடிக்காதே! 28 கோடி ரூபாய் மக்கள் பணத்தை வீணடிக்காதே!" என்று மாமன்ற கூட்டத்துக்குள் பதாகை ஏந்தி கோஷமிட்டார் மதிமுக கவுன்சிலர் ராதா சங்கர். அந்த பதாகையில் தினமும் 2 மணி நேரம் குடிநீர் வழங்க முடியாத மாநகராட்சி நிர்வாகம் எப்படி 24 மணி நேரம் குடிநீர் தரமுடியும்? என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதனால் மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் முன்னிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுக கவுன்சிலர் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தது முக்கிய அம்சமாக மாறியது. ஆனால், கூட்டத்தில் இருந்து வெளியேறாமல், தொடர்ந்து அவர் விவாதங்களில் பங்கேற்றார். 55 மாநகராட்சி உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் மதிமுகவை சேர்ந்த 41 வது மாமன்ற பெண் உறுப்பினர் தைரியமாக தனது வார்டின் கோரிக்கையை முன் வைத்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது