திருநெல்வேலி: மறுகால் குறிச்சியில் சாலையில் சுற்றிய கரடி

திருநெல்வேலி மாவட்டம் மறுகால் குறிச்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோமதி ராஜா தனது ஆட்டோவில் நாங்குநேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் நடுவே கரடி ஒன்றைக் கண்டார். அவரது வாகனத்தின் முன்பாக நடந்து வந்த கரடியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோமதி ராஜா, கவனமாக தனது வாகனத்தை இயக்கினார். அந்த கரடி அருகிலிருந்த வாழைத்தோப்புக்குள் சென்று மறைந்தது.

கரடி நடமாட்டத்தை கோமதி ராஜா தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள களக்காடு, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாபநாசம், மணிமுத்தாறு போன்ற இடங்களில் சமீப காலமாக கரடிகள் ஊருக்குள் புகுந்து அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் , மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறையினர், ' வனப்பகுதிகளுக்கு அருகே செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். கரடியைக் கண்டால் அமைதியாக இருக்க வேண்டும், பயந்து ஓட கூடாது. கரடியை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News >>