சப்வே துரித உணவகம் - அமெரிக்காவில் 500 கிளைகளுக்கு மூடுவிழா

புகழ்பெற்ற சப்வே சாண்ட்விச் துரித உணவகம் தன் கிளைகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது.

ஆன் லைன் வணிகத்தினால் நேரடியாக மக்கள் வந்து பொருட்கள் வாங்கக்கூடிய கடைகள் இழப்பை சந்தித்து வருகின்றன. ஆனால், துரித உணவகங்களை ஆன் லைன் வர்த்தகம் பாதிக்கவில்லை. இருந்தாலும், வணிக வளாகங்களில் உணவு உட்கொள்ளும் பழக்கம் மாறி வருவது, ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றால் துரித உணவகங்களில் விற்பனை குறைந்து வருகிறது.

உலகமெங்கும் 44,000 கிளைகளை கொண்டிருக்கும் சப்வே துரித உணவக நிறுவனத்திற்கு அமெரிக்காவில் மட்டும் 27,000 கிளைகள் உள்ளன. யம் பிராண்ட்ஸ், மெக்டொனால்டு போன்ற ஏனைய துரித உணவகங்களோடு ஒப்பிடும்போது, சப்வே நிறுவனத்திற்கு கிளைகள் அதிகம். ஆனால், போட்டியாளர்களின் கிளைகள் சர்வ வசதியோடு இருக்கும்போது, சப்வே உணவகங்கள் சிறிய இடங்களிலேயே இயங்கி வருகின்றன.

நிறுவனத்தின் பல கிளைகள், வர்த்தக பங்காளர்களால் (ஃப்ரான்சைஸ்) நடத்தப்படுவன. சப்வே நிறுவனத்தின் சொந்த கிளைகள் அல்ல இவை. உணவக கிளைகளில் விஸ்தாரமான இருக்கை வசதி, வை-பை வசதி மற்றும் சார்ஜிங் வசதிகளை செய்வதற்காக வர்த்தக பங்காளர்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று சப்வே நிறுவனம் எதிர்பார்த்தது. கடந்த பிப்ரவரி மாதம் கூட வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக சிறப்பு நிகழ்வுகளை நடத்தியது.

"அடுத்து வரும் பத்தாண்டு காலத்தை கருத்தில் கொண்டு, லாபகரமாக இயங்கும்படி வடஅமெரிக்காவில் எங்கள் கிளைகளை குறைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளோம். ஆனால், உலகின் ஏனைய பகுதிகளில் வர்த்தகத்தை விரிவுபடுத்த இருக்கிறோம்," என்று சப்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடஅமெரிக்க பகுதியில் 500 கிளைகளை மூடவும், பல வெளிநாடுகளில் 1000 கிளைகளுக்கு மேல் திறக்கவும் சப்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>