ஜெயலலிதா உயிரியல் மாதிரி எங்களிடம் இல்லை - கை விரித்த அப்பல்லோ

ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரி எங்களிடம் இல்லை என்று அம்ருதா தொடர்ந்த வழக்கில் அப்பல்லோ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர் ஜெயலலிதாவின் மகள் என்றும், இதை நிரூபிக்க எனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த பதில் மனுவில், ஜெயலலிதாவின் சொத்துக்களை குறிவைத்தே அம்ருதா பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், சைலஜா என்ற சகோதரியே ஜெயலலிதாவிற்கு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால், அம்ருதா வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அம்ருதா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெயலலிதாவின் உயிரி மாதிரிகள் இருக்கிறதா இல்லையா என்பது இதுவரை தெரியவில்லை. எனவே இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு புதனன்று (ஏப்ரல் 25) நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அதிமுக பிரமுகரான ஜோசப் என்பவர் உறவினர்களான தீபக், தீபா மற்றும் அம்ருதா ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்காகவே இந்த வழக்கை தொடர்ந்திருப்பதாகவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அப்போது, ஜெயலலிதாவின் உயிரியல் மாதிரிகள் தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என அப்பல்லோ தரப்பில் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிரியல் மாதிரிகள் தொடர்பாக அப்பல்லோ வியாழனன்று (ஏப். 26) அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி நேற்று வியாழனன்று [26-04-18] அப்போலோ சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளோ, உயிரியல் மாதிரகளோ தங்களிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, அறிக்கையை தாக்கல் செய்த அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர், நீதிபதியிடம் கூறுகையில், “பொதுவாக ரத்தம், சிறுநீர் மாதிரிகளை நீண்ட காலத்திற்கு பாதுகாத்து வைக்க முடியாது. எனவே, ஜெயலலிதாவிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம், சிறுநீர் மாதிரிகள் பாதுகாக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதாவிடம் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும், சிகிச்சையின்போதே பயன்படுத்தப்பட்டு விட்டதாக அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை வருகிற ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>