எங்களுக்கு பயமில்லை இதெல்லாம் சகஜம் - விஜயபாஸ்கர் கூல்

பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது என்பது இயல்பு என்றும் அதனால் எங்களுக்கு பயமில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடைசெய்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலலிதா சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் குட்கா விற்பனையாளர் மாதவ ராவ் உள்ளிட்ட பல குட்கா தயாரிப்பு ஆலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தியது.

இதற்குப் பிறகு வருமான வரித்துறை, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சிலரது ஒத்துழைப்புடன்தான் இந்தப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன; இதற்காக அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கூறி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.

இந்த விவகாரத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகரத்தின் முன்னாள் ஆணையர் ஜார்ஜ், தற்போதைய காவல்துறை தலைவர் ராஜேந்திரன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டிய திமுக, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து. தி.மு.கவின் சார்பில், வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமெனக் கூறி தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது என்பது இயல்பு. அந்த வகையில் துடிப்போடு செயல்பட்டால் கூடுதலாக அவதூறுகள் கிளம்பும். அவதூறுகளை கிளப்புவது எதிர்க்கட்சிகள்தான். அது அவர்கள் வேலை.

எங்கள் வேலை மக்கள் நலப் பணியாற்றுவது. மடியில் கனமில்லை, அதனால், எங்களுக்கு வழியில் பயமில்லை. சுகாதாரத்துறையில் வெளிப்படை தன்மையுடன் பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>