ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமானதால் பரபரப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் இளம் பெண்கள் தொடர்ந்து மாயமாவதாக பெற்றோர்கள் புகார் கொடுத்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சாருலதா(19) இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு கடந்த 3 மாதங்களாக தனியார் நிறுவனத்தில் பணியற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி வேலைக்கு சென்ற சாருலதா வீடு திரும்பவில்லை. இது பற்றி அவரது தந்தை சீனிவாசன் செவ்வாப் பேட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதேபோல, திருத்தணியை அடுத்த சின்ன கடம்பூர் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிபாபு. இவரது மகள் தேவி(27) இவர் கடந்த 22ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை.

திருத்தணி கம்மவார் தெருவைச்சேர்ந்தவர் சுபாஷினி (18) திருத்தணியில் உள்ள தமிழ்நாடு பாரா மெடிக்கல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. கனகம்மாசத்திரம் அடுத்த தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்யா (22) திருப்பாச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 24 ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதே போன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் மாயமாகியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார்கள் பதிவாகி உள்ளன. மாயமாகும் இளம் பெண்களை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது காதல் காரணமாக வீட்டை விட்டு சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>