132 ரன்களே எடுத்திருந்த போதும் 13 ரன்களில் ஹைதராபாத் வெற்றி!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2018ஆம் ஆண்டின் 25ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அணிகளுக்கு இடையே ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. கென் வில்லியம்சன் டக் அவுட் ஆனார். தொடர்ந்து ஷிகர் தவான் 11, விருத்திமான் சாஹா 6 என அடுத்தடுத்து வெளியேற 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. பின்னர் ஷாகிப் அல் ஹசன் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். மணீஷ் பாண்டே 54 ரன்கள் எடுத்தார். கடைசி வரை களத்தில் இருந்த யூசுஃப் பதான் 21 ரன்கள் எடுத்திருந்தார்.
பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி முதல் விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் [32, கிறிஸ் கெயில் [23] இணை 55 ரன்கள் சேர்த்தது. ஆனால், அதன்பின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. மயங்க் அகர்வால் [12], கருண் நாயர் [13], ஆரோன் பிஞ்ச் [8], மனோஜ் திவாரி [1], ஆண்ட்ரூ டை [4], பரிந்தர் ஸ்ரன் [2], அஸ்வின் [4], அங்கிட் ராஜ்பூட் [8] என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ 119 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
இதனால், ஹைதராபாத் 13 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி சார்பில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக மும்பை அணியுடனான போட்டியிலும் ஹைதரபாத் அணி 118 ரன்கள் குவித்திருந்த போதிலும், மும்பை இண்டியன்ஸ் அணியை 87 ரன்களுக்குள் சுருட்டி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com