மீண்டும் திமுகவில் இணைவேன் - மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி
கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். ஆனால், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சீண்டி வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், “ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும்வரை திமுக எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறாது. ஸ்டாலினுடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் சரியில்லை. துரோகம் செய்தவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே திமுக முன்னேறும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியை நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் அழகிரி சந்தித்தார். அப்போது தனது தாயார் தயாளு அம்மாளையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ‘‘எனது தாய், தந்தையை சந்திப்பதற்காக சென்னை வந்தேன். சந்தித்து விட்டேன். கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைந்து பணியாற்றுவேன்’’ என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com