ஒரு மார்க் பெற போராடினேன் - நெல்லை சரக டி.ஐ.ஜி சுவாரஸ்யத் தகவல்
நெல்லை அரசு சட்டக்கல்லுரியில் இன்று ( மார்ச் 13 )மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்ட நெல்லை சரக டிஐஜி மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
சட்ட கல்லூரி மாணவர்கள் திரண்டு உள்ள இந்த கூட்டத்தில் காவல் துறையை சேர்ந்த எனக்கு என்ன வேலை என நீங்கள் யோசிக்கலாம். நானும் சட்டம் படித்தவன்தான். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தேன். நான் எம்எல் பட்டத்தில் 59.69 மதிபெண்கள் பெற்றேன். அதில் 1 மதிப்பெண் போட்டு 60 மதிப்பெண்ணாக போட சென்னை பல்கலைக்கழகம் மறுத்து விட்டது. என்னுடைய வக்கீல் விடவில்லை. வழக்கு தொடர்ந்தார். அதன்பின் மதிப்பெண்ணை 60 ஆக மாற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் சென்னை பல்கலைக்கழகம் மேல்முறையீடு செய்தது. எனது வக்கீல் விடாப்பிடியாக 1 மதிபெண்ணுக்காக போராடினார். எனக்கு அந்த பட்டம் கிடைப்பதால் சம்பளம் கூடுமா ? என்றால் இல்லை.
உங்களைப்போல் சட்டக்கல்லூரி மாணவர்களை சந்திக்கும் போது நானும் சட்டத்தில் இந்த பட்டங்களை படித்தவன் எனக் கூறிக்கொள்ள முடியும் அவ்வளவுதான். எனது இந்த வழக்கு எல்லா சட்டக்கல்லூரியிலும் ஒரு பாடமாக எடுக்கிறார்கள். ஒரு வழக்கை திறம்பட கையாள வாதத்திறமை தேவை. அதற்கு நமக்கு உண்மையான புள்ளிவிவரங்கள் தெரிய வேண்டும் . இப்போது ஏஐ வந்து விட்டது. அதில் அடுத்த நொடியே விவரங்கள் வந்துவிடுகிறது. ஆனால் அதை வைத்துக்கொண்டு பேச வேண்டுமென்றால், சட்ட அறிவு இருந்ததால்தான் முடியும். அதனால் சட்டக்கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் நுட்பமாக சட்டத்தை அறிந்தால் தான் வாதாட முடியும்.'
கம்பராமாயணத்தில் இலங்கையில் சிறைபட்ட சீதையை பார்த்து விட்டு வந்த அனுமன் ராமனிடம் கண்டேன் சீதையை என தேவையானதை சுருக்கமாகக் கூறி விளங்க வைப்பார். அந்த திறமை வக்கீல்களுக்கும் வர வேண்டும். நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருப்பவர்கள் வக்கீலை விட 200 மடங்கு மதிநுட்பம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம் சுருக்கமாக செய்தியை சொல்லி வாதிடும் திறமையை வக்கீல்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் காவல் துறையில் கூலி வாங்கும் சாதாரண ஆள். நான் ஒரு அரசு அதிகாரி, அதனால் நான் சொல்வது உயர்வானது என்று நினைக்கக்கூடாது. நான் சொன்னதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உரைப்பது எனது கடமை. நான் விதைத்த விதை நல்ல நிலத்தில் விழும் என நம்புகிறேன் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன், மூத்த வக்கீல் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக நெல்லை, அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ராமபிரான் ரஞ்சித்சிங் வரவேற்று பேசினார். போட்டிக்கான ஏற்பாடுகளை பேராசிரியார்கள் சண்முகசுந்தரம், சண்முக சுந்திரக்குமார் உட்பட பலர் செய்திருந்தனர். இந்த போட்டியில் 26 சட்டக்கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.