தாய் மொழிக்கு துரோகம் செய்யும் ரஜினி - பாரதிராஜா காட்டம்
தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? என்று இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வார காலம் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்தும், அதனை அலட்சியம் செய்த மோடி அரசின் நயவஞ்சகத்தை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கல்லணையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா பங்கேற்றார்.
அப்போது பேசிய பாரதிராஜா, “எல்லோருக்கும் தமிழ் உணர்வு உள்ளது. ஆனால், அவர்கள் எல்லோரும் தமிழர்கள் ஆகிவிட முடியாது. இந்தக் கூட்டத்தில் அடையாளத்தை தொலைத்துவிட்டு தமிழர் கொடியை தூக்கிக்கொண்டு நின்றீர்கள். வீதிகளில் ஒரே குடையின் கீழ் இணையுங்கள். என்றைக்குப் பால் அபிஷேகம் பண்ணினீங்களோ, குஷ்புவுக்குக் கோயில் கட்டினீர்களோ அன்றைக்கே முடிந்தது போராட்ட உணர்வு.
நான் ஒரு தமிழன் என ரஜினி கூறுவது அவரது தாய் மொழிக்கு செய்யும் துரோகம். தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? முதலில் எதிரியை துரத்துவோம்; பின்னர் அண்ணன், தம்பி பிரச்னைகளை பார்த்துக்கொள்வோம். கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் என இளைஞர்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com