முதலாளி பெயரில் சமூகவலைத்தளங்களில் போலி அக்கவுண்ட் தொடங்கி மோசடியா? தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக சைபர் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் , நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பவர்களின் புகைப்படங்களை வைத்து போலியாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை சைபர் குற்றவாளிகள் உருவாக்குகின்றனர். பின்னர், அதே நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை தொடர்பு கொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட நிறுவனம் சார்ந்த அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். தொடர்ந்து, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடி செய்யும் வேலையில் சைபர் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர்.
எனவே , தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சைபர் மோசடி குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சைபர் மோசடி குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சைபர் குற்ற உதவி எண் 1930 மற்றும் cybercrime.gov.in என்ற சைபர் குற்ற இணையதளம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.