இண்டியானாபொலிஸில் இன்போசிஸின் புதிய வளாகம்! 3000 பேருக்கு வேலை?
இன்போசிஸ் 245 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான திட்டத்தை 141 ஏக்கர் நிலப்பரப்பில், அமெரிக்காவின் இண்டியானாபொலிஸில் ஆரம்பிக்க இருப்பதாக அதன் தலைவர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
35 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பயிற்சி மையம் ஒன்றை பழைய சர்வதேச விமான நிலையம் அருகே அமைக்க இருப்பதாகவும், அம்மையத்தில் பிக் டேட்டா, கிளவுட் டெக்னாலஜி உள்ளிட்ட கணினி திறன் போதிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்போசிஸின் இந்த புதிய வளாகத்தில் எஞ்ஜினியர்கள், டெவலப்பர்கள், அனலிஸ்ட்டுகள், ஆர்க்கிடெக்ட்டுகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் பணிபுரிவார்கள் என தெரிகிறது. இண்டியானா பொருளாதார மேம்பாடு கழகம், இப்புதிய திட்டத்திற்கு 101.8 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஊக்கத்தொகை மற்றும் மானியம் வழங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.
"இது மிகவும் திறன்வாய்ந்த கூட்டு முயற்சி. நாம் வணிகம் செய்யும் பாணியே இனி மாறிவிடும்," என்று இண்டியானாபொலிஸ் ஆளுநர் எரிக் ஹோல்கோம்ப் கூறினார். இந்நிகழ்ச்சியில் துணை அதிபர் மைக் பென்ஸூம் கலந்து கொண்டார்.
கடந்த ஆண்டு மே மாதம், இண்டியானாபொலிஸ், வடக்கு கரோலினா, கனக்ட்டிகட் மற்றும் ரோட் தீவில் தொழில்நுட்ப மையங்களை அமைக்க இருப்பதாக இன்போசிஸ் அறிவித்தது. அதன்படி, முதல் மையமாக இண்டியாபொலிஸ் மையத்தின் பணிகள் 2021-ம் ஆண்டு முடிவடைந்து 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது.
தற்போது, 31 மில்லியன் டாலர் வரி விலக்கு மற்றும் பயிற்சி நிதி பெற்ற நிலையில் திட்டம் விரிவாக்கப்பட்டு 2023-ம் ஆண்டு முடிவடையும்படியும் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இண்டியாபொலிஸில் காணப்படும் திறமையை கருத்தில் கொண்டே இந்த பெரிய திட்டத்தை இங்கு ஆரம்பிப்பதாக இன்போசிஸ் தலைவர் குமார் தெரிவித்தார். உலகம் முழுவதும் 2 லட்சத்துக்குள் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ள இன்போசிஸ் நிர்வாகம், அதிபர் டிரம்ப்பின் புதிய விசா விதிகள், அமெரிக்காவில் தங்கள் செயல்பாடை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com