சாதி, மதம் பற்றி சமூகவலைத் தளத்தில் பதிவிடுகிறீர்களா ? தூத்துக்குடி போலீஸ் செய்ய போகும் காரியம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியான மோதலை தூண்டும் வகையில் புகைப்படங்களையோ, பாடல்களையோ மற்றும் வசனங்களையோ சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியாக மோதல்களை தூண்டும் வகையிலோ, தலைவர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்தோ, ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது பாடல்களை ஒலிக்கச் செய்து இரு பிரிவினருக்கிடையே மோதலையோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை மாவட்ட காவல்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாதி பிரச்சனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டங்கள், பாலியல் குற்றங்கள், சாதி, மத ரீதியான மோதல்களை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள் அல்லது செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு போன்றவை குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியான மோதலை ஏற்படுத்தும் வகையிலோ, பிற சாதியினரை புண்படுத்தும் வகையிலோ, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம். மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
More News >>