நெல்லையில் காலையில் பயங்கரம்: மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர் வெட்டிக் கொலை
நெல்லையில் காலையில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டு வெளியே வந்தவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை டவுண் பகுதியில் தடி வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசைன். 60 வயதான இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். கருணாநிதி முதல்வராக இருந்த போது, முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாகலம் பணியாற்றியுள்ளார். ஓய்வுக்கு பிறகு, மசூதி ஒன்றில் முத்தவல்லியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து வந்துள்ளார். இன்று (மார்ச் 18 ) காலை டவுண் பகுதியிலுள்ள மசூதியில் தொழுகைக்கு சென்றுள்ளார். தொழுகை முடிந்து வெளியே வந்த அவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்றுள்ளது. இதனால், திருநெல்வேலியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவலையடுத்து, திருநெல்வேலி மேற்கு மாவட்ட துணை ஆணையர் கீதா, உதவி ஆணையர் அஜித்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர். வக்பு வாரியத்துக்கு சொந்தமான 32 சென்ட் நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்துள்ளது.
நிலத் தகராறு காரணமாக அவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட ஜாகீர் உசைனின் உடல் உடற் கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் நடந்த பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி பதிவுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்குக்காக போலீசார் அப்பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேனுக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர் .மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது