இரட்டைக் குழல் துப்பாக்கி பாஜகவுடன் இணைந்து வஞ்சகம் - ஸ்டாலின்

அதிமுக இரட்டைக் குழல் துப்பாக்கியாக பாஜகவின் நிலைப்பாட்டுடன் இணைந்து நின்று, தமிழக மக்களை மேலும் வஞ்சிக்கப் போகிறதா? என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவே போவதில்லை என்பதற்கு சான்றாக, மேலும் 2 வாரகால அவகாசம் கோரி தற்போது புதிய மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் துச்சமென மதித்து, கர்நாடக சட்டமன்ற தேர்தல் லாபத்தை மட்டும் மனதில் கொண்டு செயல்படும் மத்திய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கை, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் உணர்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்களும், தமிழக விவசாயிகளும் ஏமாளிகள் அல்ல என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ளும் காலம் விரைவில் வரும்.

இந்நிலையில், தமிழ்நாட்டை ஆளுகிற அதிமுக அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தாமல், அதிகார பலம் கொண்டு, தமிழக அரசியல் இயக்கங்களின் வாயை மூடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக திமுகவினர் பேசிய போது, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடு வரை பொறுத்திருப்போம் என்று மத்திய அரசுக்கு ஆதரவான குரலில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் அந்தக் காலக்கெடு முடிந்து, கூடுதல் அவகாசமான மே 3ஆம் தேதி நெருங்கி வரும் நிலையில், மேலும் 2 வார அவகாசம் கேட்கும் மத்திய அரசின் பச்சைத் துரோகத்தை, மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு எதிர்க்கப்போகிறதா? அல்லது கூடுதலாக 2 வார அவகாசத்துக்கும் பொறுத்திருப்போம் என இரட்டைக் குழல் துப்பாக்கியாக பாஜகவின் நிலைப்பாட்டுடன் இணைந்து நின்று, தமிழக மக்களை மேலும் வஞ்சிக்கப் போகிறதா?

காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் கொண்டுள்ள கோபத்துக்கு அஞ்சி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் நடத்துகின்ற பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து திசை திருப்பும் வேலைகளை செய்யாமல், இந்தக் கேள்விக்கு நேர்மையான முறையில் பதில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.

காவிரி உரிமைக்காக தமிழக மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த தருணத்தில், பொறுமை காக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய உச்ச நீதிமன்றம், தற்போது மத்திய அரசு கேட்டு இருக்கின்ற இருவார கால அவகாசத்தை வழங்கி, காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலை நிறுத்தும் வாய்ப்பை மேலும் நீட்டிக்க ஒப்புகொள்ளவே கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

 

More News >>