திசையன்விளை : மன்னார்புரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சார்பில் நலத்திட்ட உதவிகள்

திசையன்விளை அருகேயுள்ள மன்னார்புரம் புனித . ஜெபமாலை மாதா ஆலய வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார்.

முகாமில், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, மரக்கன்றுகள் நட்டார்.

முகாமில் 16 பயனாளிகளுக்கு பட்டா, 3 பயனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கான கடனுதவி, 9 பயனாளிக்கு கடனுதவி, 22 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, 3 பயனாளிகளுக்கு இலவச அயர்ன் பாக்ஸ், 6 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள், என மொத்தம் ரூ.20.78 லட்சம் மதிப்பில், 68 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மொத்தம் 114 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டதாகவும், இதில் 75 மனுக்கள் ஏற்க்கப்பட்டதாகவும், 39 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாங்குநேரி யூனியன் தலைவர் சௌம்யா ஆரோக்கிய எட்வின், தனித்துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இளங்கோ, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் அகஸ்டின் கீதராஜ், பஞ்சாயத்து தலைவர் சின்னதம்பி, மாவட்டமாற்றுத்திறனாளி நல அலுவலர் சிவசங்கரன், திசையன்விளை தாசில்தார் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More News >>