குற்றவாளியின் படத்தை சட்டசபையில் வைப்பது தவறு - நீதிமன்றம் அதிரடி

ஒரு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் புகைப்படத்தை சட்டப்பேரவையில் வைப்பது தார்மீக அடிப்படையில் பார்த்தால் தவறுதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி திறக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை பேரவையில் வைப்பது சட்ட விரோதம். சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தனபாலுக்கு பேரவைத் தலைவர் பதவி வழங்கியதால் அதற்கான விசுவாசத்தை காட்டும் வகையில், ஜெயலலிதா படத்தை விதிகளை மீறி பேரவைத் தலைவர் திறந்து வைத்துள்ளார்.

எனவே, அந்தப் படத்தை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு வெள்ளியன்று (ஏப். 27) நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில், ஒரு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் புகைப்படத்தை சட்டப்பேரவையில் வைப்பது தார்மீக அடிப்படையில் பார்த்தால் தவறுதான்.

ஆனாலும், பேரவைத் தலைவரின் நிர்வாக அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா புகைப்படத்தை அகற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>