காவிரி பிரச்சனைக்காக ஐநாவுக்கு கடிதம் எழுதிய வைகோ!
காவிரி பிரச்சினையில் தலையிட்டு, தமிழகத்திற்கு நீதி கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடித்தத்தில், “பலநூறு ஆண்டுகளாக காவிரி நீர் பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் 2.5 மில்லியன் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசனம் பெறுகின்றன. ஒட்டுமொத்தமாக, 81,155 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு காவிரி நீரால் பயன்பெறுகின்றது.
1924 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையும், தமிழ்நாட்டில் மேட்டூர் அணையும், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டன. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து, மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்.
ஆனால், இந்த உடன்படிக்கைக்கு எதிராக, இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் ஒப்புதல் எதுவும் பெறாமல், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய இடங்களில் கர்நாடக அரசு மூன்று புதிய அணைகளைக் கட்டியது.
பல நூறு ஆண்டுகளாக, கர்நாடக மாநிலத்தில் 25 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். அந்த மாநிலச் சட்டங்களை மதித்து நடக்கின்றனர். 1990 களில், காவிரி நதிநீர்ப் பிரச்சினையால், சில கன்னட அமைப்புகளால், தமிழர்கள் தாக்கப்பட்டனர். ஆனால், அதுபோன்ற தாக்குதல் எதுவும், தமிழகத்தில் வாழும் கன்னட மக்கள் மீது நடத்தப்படவில்லை.
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள், காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள் சட்டத்தின் 6(2), 1956 பிரிவின்படி, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானதாகும்.
பக்ரா-பியாஸ் நதிநீர் மேலாண்மை வாரியம் போல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அரசு, காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை 6 ஆண்டுகளாக, அரசிதழில் வெளியிடவில்லை. உச்சநீதிமன்றக் கண்டிப்புக்குப் பிறகு, 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அரசாணையில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகும் கூட, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.
எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்தது. இந்நிலையில், மேலும் அதிர்ச்சி அளிக்கின்ற வகையில், கர்நாடக அரசு, மேகதாது, ராசி மணல் ஆகிய இரண்டு இடங்களில் காவிரியின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டத் திட்டமிட்டு, அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து வருகின்றது.
அப்படி இந்த அணைகளைக் கட்டிவிட்டால், அதன்பிறகு, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குக் காவிரி நீர் வராது. 25 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு பாழாகும். தமிழகத்தின் பசுமையான காவிரி தீரப் பகுதிகள் காய்ந்து பாலை மணல்வெளி ஆகும். அதனால் ஏற்படக்கூடிய பேரபாயத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகின்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால், அதன்பிறகு, கர்நாடக அரசு புதிய அணைகளைக் கட்டமுடியாது. தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படும், நீதி நிலைநாட்டப்படும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், இந்திய அரசு, கபட நாடகம் ஆடுகின்றது; இரட்டை வேடம் போடுகின்றது; தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றது.
எனவே, இப்பிரச்சினையில் ஐநா தலையிட்டு, இந்திய அரசைத் தொடர்பு கொண்டு, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதி கிடைக்கவும், குடிநீர் வழங்கவும் தமிழகத்தின் பாசனப் பரப்பைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com