நகைக்கடன் வழங்க விதித்த புதிய விதி :விழிபிதுங்கும் மக்கள் -
மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு வங்கிகளில் நகைக்கடன் பெறுவது வழக்கம். குறிப்பிட்ட காலத்தில் நகைகளை திருப்ப தவறும் போது அதுவரையிலான வட்டியைக் கட்டி நகைகளை மறு அடகு வைப்பது வழக்கம். ஆனால் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள அறிவிப்பின்படி வழக்கமான முறையில் மக்கள் தங்கள் நகைகளை மறு அடகு வைக்க இயலாது. நகைகளை அசல் மற்றும் வட்டியுடன் கட்டி மீட்ட பின் மறுநாளே வங்கியில் மறுஅடகு வைக்க இயலும்.
இத்தகைய புதிய அறிவிப்பால் வங்கிகளில் உள்ள நகைகளை மீட்க முழுத்தொகையினையும் கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கென மீண்டும் கடன் வாங்கவேண்டிய நிலைக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர். இதனால் மேலும் நிதிச்சுமைக்கு ஆளாவதுடன் வீண் அலைச்சல். மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
விவசாயிகள், சிறு வணிகர்கள், பெண்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தனிநபர்களிடம் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது . நகைகளை திருப்ப இயலாததால் அவை கைநழுவிப் போகும் அவலமும் நேர்கிறது.
நாட்டின் கடைக்கோடியில் உள்ள விளிம்பு நிலை மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவசரகதியில் புதிய விதிமுறை வெளியிட்டு உள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. தனியார் வங்கிகள் மக்களை கொள்ளையடிக்கவும் கார்பரேட் நிறுவனங்கள் கொழுக்கவும் புதிய விதிமுறை இடம் அளிக்கிறது.
ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட முயலாமல், அவர்களை தீரா பொருளாதார நெருக்கடியில் தள்ளும் இத்தகைய மக்கள் விரோத, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான முடிவினை கைவிட வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறையே தொடர செய்ய வேண்டுமென்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.