தீக்காயமடைந்த நோயாளியை அரசு மருத்துவமனையில் இருந்து தனது மருத்துவமனைக்கு மற்றிய டாக்டர்... பின்னணி என்ன?

திருநெல்வேலியில் நேற்று தென் மாவட்டங்களுக்கான மனித உரிமை மீறலுக்கான வழக்குகள் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணர் ஒருவர், தனது தனியார் மருத்துவமனைக்கு ஒரு பெண் நோயாளியை கட்டாயமாக மாற்றியதாகக் குற்றம்சாட்டிய இராணுவ வீரரின் மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய (SHRC) உறுப்பினர் வி. கண்ணதாசன், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவரையும், மருத்துவ பணியாளர்களையும் கடுமையாக கண்டித்தார்.

2019 ஆம் ஆண்டு, இராணுவ வீரர் எஸ். கருப்பசாமி அளித்த மனுவில், கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் சி. பிரபாகரன் 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் என் மனைவி தீக்காயங்களுக்கு உள்ளானபோது, நான் விடுப்பில் வீட்டுக்கு வந்திருந்தேன். நான் எனது மனைவியை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அப்போது டாக்டர் பிரபாகரன் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில், அவர் 10 நாட்களுக்கு விடுப்பு செல்லப் போவதாக கூறி, தனது ஜெய் மருத்துவமனைக்கு மாற்ற ஆலோசனை வழங்கினார். நான் மறுத்துவிட்டேன். ஆனால், அவரது மருத்துவமனை சார்பில் இருவர், என் உறவினர்களை நம்பச் செய்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் என் மனைவியை 'ஜெய் பிரைவேட் ஹாஸ்பிடல்'க்கு மாற்றினர். அங்கு , முறையான சிகிச்சை தரவில்லை, என் மனைவி உயிரிழந்துவிட்டார்" என தனது மனுவில் கருப்பசாமி குறிப்பிட்டிருந்தார்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்காக ரூ.11 லட்சம் பல கட்டங்களாக வசூலிக்கப்பட்டதுடன், முறையான சிகிச்சை வழங்கப்படாததால் மனைவி உயிரிழந்ததாகவும், இதனால், ஜெய் மருத்துவமனையை மூட வேண்டுமென்றும் அவர் புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் வி. கண்ணதாசன், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையானவை எனக் குறிப்பிட்டு, டாக்டர் பிரபாகரன், விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருப்பதையும் கண்டித்தார். விசாரணைக்கு ஆஜராகியிருந்த இரு நர்ஸ்கள், டாக்டர் பிரபாகரன் தனக்கு ஏற்றது போல மருத்துவ பதிவுகளை மாற்றச் சொன்னதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் பதிலளித்த அரசு மருத்துவமனை சூப்பிரடென்ட் டாக்டர் கமலவாசன், டாக்டர் பிரபாகரனை, ஒழுங்கீனம் காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவுக்கு மாற்றியிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, SHRC உறுப்பினர் கண்ணதாசன், "இது ஒழுங்கு நடவடிக்கையாகக் கருத முடியாது; மாற்றுப்பணி என்பது தண்டனை அல்ல" எனக் கண்டித்து, அரசு மருத்துவமனை தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) விதிமுறைகளை பின்பற்றத் தவறியுள்ளது என சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த வழக்கு, அரசு மருத்துவமனையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் முக்கிய சம்பவமாகப் பார்க்கப்படுகிறது. நோயாளியின் சிகிச்சை பெறும் அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கையில், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை அவரது விருப்பத்திற்கு மாறாக தனது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மருத்துவரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக வரும் ஜூன் மாதத்தில் தீர்ப்பு அளிக்கவுள்ளேம் என்றும் கண்ணதாசன் கூறியுள்ளார்.

More News >>