மதுரையில் சித்திரை தேரோட்டம் பெருவிழா: பக்தர்கள் பரவசம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவையட்டி, நேற்று அலங்காரம் செய்யப்பட்ட அழகிய தேர்களில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை மற்றும் மீனாட்சி பவனி வந்தனர். தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாளான நேற்று முன்தினம் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. 11ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. அதிகாலை கோயிலில் இருந்து கீழ்மாசி வீதியில் உள்ள தேரடிக்கு அம்மன், சுவாமி, பிரியாவிடை சென்றனர்.

அங்குள்ள கருப்பசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேஷ லக்னத்தில் அம்மன் சிறிய தேரிலும், பிரியாவிடையுடன் சாமி பெரிய தேரிலும் எழுந்தருளினர். இதனை காலை 6.30 மணியளவில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

தேரோட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘சங்கரா சங்கரா’ கோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க, 4 மாசி வீதிகளிலும் தேர்கள் அழகாக வலம் வந்தன. தேரோட்டத்திற்காக சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து, இன்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் மீண்டும் திருப்பரங்குன்றம் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் சித்திரை பௌர்ணமி திருவிழா நிறைவடைகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>