திருநெல்வேலி தர்பூசணிகளில் செயற்கை நிறமி இல்லை: தோட்டக்கலைத் துறை விளக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் விளைவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமிகள் கலப்படம் செய்யப்படவில்லை என்று மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்(பொ)மாலதி தெரிவித்துள்ளார்.

தர்பூசணியில் இரசாயனம் கலப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணியில் நீர்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1 மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பயிரிடப்பட்டும் தர்பூசணி பழங்கள் கோடைக்காலத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. முறையாக பராமரித்தால் ஒரு ஏக்கரில் 8 முதல் 10 மெட்ரிக் டன் வரை மகசூல் பெற முடியும்.

சமீபத்தில் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமிகள் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் தர்பூசணிகளில் செயற்கை நிறமி எதுவும் கலப்படம் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவித்த தர்பூசணி பழங்களுக்கு உரிய விலை பெற்று பயனடையலாம். மேலும், பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இந்த சத்தான பழத்தை உண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>