வி.கேபுரம் நகராட்சித் தலைவருடன் அதிமுக கவுன்சிலர் கிரேஸ் இமாகுலேட் கடும் மோதல்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் தொடர்ச்சியாக பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. அண்மையில், நகர்மன்றத் தலைவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்று (ஏப்ரல் 29)நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில், சுமார் 35 லட்சம் ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் கூறி, திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் தொடர்ந்து சர்ச்சை நிலவுவதால், மக்கள் நலத்திட்டங்கள் முடங்கி போய் கிடக்கிறது. 10-வது வார்டு திமுக உறுப்பினர் குட்டி கணேசன் மற்றும் ஒன்றாவது வார்டு அதிமுக பெண் கவுன்சிலர் கிரேஸ் இமாகுலேட் உட்பட பல்வேறு அதிமுக கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் செய்த கவுன்சிலர்களிடம், அதிமுக கடந்த 10 வருடமாக ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்கள் என்று நகராட்சி தலைவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அதிமுக பெண் கவுன்சிலர் கிரேஸ் இமாகுலேட், "10 வருடத்தில் நாங்கள் வாங்கிக் கொடுத்த நிதியில் தான் தற்போது விக்கிரமசிங்கபுரம் நகராட்சி இயங்கி வருகிறது" என்று கூறியதால் மேலும் மோதல் வலுத்தது.ங
இதையடுத்து, அதிருப்தியடைந்த அதிமுக கவுன்சிலர்கள், நகராட்சி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.