கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பூட்ட முடியாத கழிவறை கதவுகள் தவிப்பில் பயணிகள்

கன்னியாகுமரி முதல் சென்னை வழித்தடத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.12633/12634) இயக்கப்படுகிறது. 739 கி.மீ தூரம் கொண்ட இந்த பாதையில் இந்த ரயிலின் பயண நேரம் 12 மணிநேரம் 10 நிமிடம் ஆகும். தமிழகத்தின் முக்கிய பகுதிகள் வழியாக செல்வதாலும், தலைநகரை இணைப்பதாலும் எப்போதும் ரயில் நிரம்பி வழியும்.

இந்நிலையில் சரிவர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால் ரயிலில் எலி மற்றும் கரப்பான்பூச்சி தொல்லைகள் அதிக அளவில் உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. உணவு மற்றும் பொருட்களை இவை நாசப்படுத்தி விடுவதோடு சுகாதார சீர்கேட்டிற்கும் காரணமாகின்றன என்றும பயணிகள் தெரிவிக்கின்றனர்.

22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலில் உள்ள சில பெட்டிகளில் உள்ள கழிவறைகளின் கதவுகள் பூட்ட முடியாத நிலையில் உள்ளது. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்கச் செல்லும் பயணிகள் கழிவறையினை பயன்படுத்த முடிவதில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள், முதியோர், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

சென்னை எழும்பூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் உள்ள பராமரிப்பு மையங்களில் பராமரிக்கப்படுகிறது வழக்கம். பழைய ரயில் பெட்டிகளை பயன்படுத்துவதாலும் இத்தகைய நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News >>