கோடை காலம் : கூடன்குளம் அருகே தென்னை ஓலைகளை முடைந்து தினசரி ரூ.250 வரை சம்பாதிக்கும் பெண்கள்..!!
தற்போது கோடை வெயிலை சமாளிக்க வீடுகளை குளுமையாக வைக்க உதவும் தென்னந்தட்டிகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது. நெல்லை மாவட்டம் கூடன்குளம் அருகே தில்லைவனம்தோப்பு பகுதியிலுள்ள தென்னந்தட்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட வியாபாரமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காலையில் சுட்டெரிக்க தொடங்கினால் மாலை வரை கொளுத்துகிறது கோடை வெப்பம். வெயிலில் இருந்து தப்பிக்க ஏ.சி. முதல் மண்பானை வரை வசதிக்கேற்ப ஏதேனும் ஒன்றை நாடுகின்றனர் மக்கள். அப்படி வீடுகளில் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள ஏழை, எளிய மக்கள் முதலில் நாடுவது தென்னந்ஒலைகள் தான். நெல்லைமாவட்டம் கூடன்குளம் அருகே உள்ள தில்லைவனந்தோப்பு பகுதி முழுக்கவே தென்னந்தட்டி தயாரிப்பே பிரதான தொழிலாக உள்ளது. மற்ற நாட்களைவிட கோடை காலத்தில் தென்னந்தட்டிகளின் விற்பனை பலமடங்கு அதிகரிக்கிறது. வெயிலுக்கு முன்பாக தென்னை மரங்களில் இருந்து ஓலைகளை வெட்டி வாகனங்களில் கொண்டு வரும் வியாபாரிகள் அதை தொழிலாளர்களின் வீடுகளில் கொடுத்து தட்டியாக முடையப வைக்கின்றனர். பெரும்பாலும் பெண்களே இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.
இங்கூ முடையப்படும் ஒலைகள் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 50 முதல் 70 தட்டிகள் செய்து கொடுப்பதன் மூலம் ரூ.200 முதல் ரூ.250 வரை வருவாய் கிடைப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். மற்ற நாட்களில் பந்தல் போட பயன்படும் பாதி ஓலையில் தயார் செய்யப்படும் தட்டிகளே பெருமளவில் விற்பனையாகும் . ஆனால் கோடை காலத்தில் கூரை அமைக்க எளிதாக இருக்கக்கூடிய முழு ஓலையில் செய்யக்கூடிய தட்டிகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். தற்போது மேற்கூரைக்கு சிமெண்டு ஷீட், பந்தல் அமைக்க துணி ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் எங்கள் தொழில் நலிவடைந்து வருகிறது. 1½ அடி அகலமும், 7 அடி நீளமும் கொண்ட 25 தென்னந்தட்டிகள் கொண்ட ஒரு கட்டு, மழைக்காலங்களில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலத்தில் ரூ.150-க்கு விற்பனையாகிறது.
மழைக்காலங்களில் தென்னந்தட்டியை பின்னுவதற்கு போதிய இடவசதி இல்லாமல் இருப்பதால் ஆங்காங்கே சிறிய வகை கொட்டகைகள் அமைத்து தர அரசு உதவ வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.