தினகரனுக்கு போட்டியாக அம்மா அணி அமைப்பை தொடங்கிய திவாகரன்
டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் “அம்மா அணி” என்ற தனி அமைப்பை தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி தினகரன் அணிக்கும் திவாகரன் அணிக்கும் மோதல்போக்கு அதிகரித்து வந்தது. இதனையடுத்து, இரு தரப்பும் மாறி மாறி அறிக்கைகள் விட்டுவந்தன. இதனையடுத்து அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த திவாகரன், அம்மா அணி என்ற பெயரில் செயல்படுவோம் என கூறியிருந்தார்.
அதன்படி, நேற்று மன்னார்குடியில் அம்மா அணி என்ற பெயரில் அலுவலகத்தை திவாகரன் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “அம்மா அணிக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். அணியில் இணைய யாருக்கும் அழைப்பு விடமாட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அணியில் இணைவார்கள்.
தினகரனால் இழுத்து மூடப்பட்ட அம்மா அணிக்கு புத்துயிர் அளித்துள்ளேன். ஜெயலலிதா முதன்முதலில் கட்சி தொடங்கியபொழுது என்னுடைய ஆதரவாளர்களுக்கே பொறுப்புகளை தந்தார்” என்று தெரிவித்தார்.
மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செயல்பட விருப்பம் இல்லாத நிலையில் அம்மா அணி அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளதாகவும், அதிமுக அம்மா அணியை பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com