புயலில் சிக்கி காணாமல்போன 260 மீனவர்களின் கதி என்ன?

ஒகி புயலில் சிக்கி மாயமான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 220 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், காணாமல்போன மற்ற 260 மீனவர்களின் கதி என்னவானது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒகி புயல் பாதிப்பு, வெள்ள நிவாரணப் பணி குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து காணாமல் போன 220 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எஞ்சிய 260 மீனவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

மாயமான 2,570 மீனவர்களில் இதுவரை 2,384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் முதமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மீட்கப்பட்ட மீனவர்கள் குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒகி புயலால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சசர், சேத விவரங்கள் குறித்து வரும் 11ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் அடுத்த 48 மணி நேரத்தில் மின்விநியோகத்தை சீரமைக்க முதமைச்சர் ஆணையிட்டுள்ளார். நீர்நிலைகளின் மதகுகள், கரைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காணாமல்போன மீனவர்களின் குடும்பத்தினர் நம்பிக்கை கலந்த சோகத்துடன் காத்துக்கிடக்கின்றனர். அவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

More News >>